For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காமராஜர், கக்கன், மூப்பனார் வகித்த தலைமை பொறுப்புக்கு வந்துள்ள செல்வப்பெருந்தகை...! அரசியலில் கடந்து வந்த பாதை...!

11:33 PM Feb 17, 2024 IST | Web Editor
காமராஜர்  கக்கன்  மூப்பனார் வகித்த தலைமை பொறுப்புக்கு வந்துள்ள செல்வப்பெருந்தகை     அரசியலில் கடந்து வந்த பாதை
Advertisement

காமராஜர், கக்கன், மூப்பனார் என மிகப்பெரிய ஆளுமைகள் அலங்கரித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாத இந்த போராளி தலைவரை பற்றி பார்க்கலாம்.

Advertisement

சென்னை மாநகரத்திற்கு அருகில் உள்ள படப்பை – மணிமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்த பின் சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். விடுதலைப்போராட்ட வீரரும், பொதுவாழ்வில் சத்தமில்லாமல் செயல்பாடுகள் மூலம் பணியாற்றியவருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு வை ரோல் மாடலாக கொண்டு செயல்படுபவர் செல்வப்பெருந்தகை.

ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றினாலும், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவேயில்லை. இதனால் பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி மூலம் தனதுஅரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கு.செல்வப்பெருந்தகை. பின்னர் 2001 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் இடம் பெற்றார். அக்கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் பொதுச்செயலாளராக இருந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் செல்வப் பெருந்தகையும், ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். அப்போது விசிக சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டவர் செல்வப் பெருந்தகை.

பின்னர் திருமாவளவனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினார். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவர் ஆனார்.

அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் என்ன பதவி வேண்டும் என கேட்ட ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவில் எனக்கு பதவி வழங்குங்கள் என கூறினார். அதைப் பெற்றுக்கொண்ட பிறகு சும்மா இருந்துவிடாமல், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் செங்கம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆனால் சளைக்காத மக்கள் போராளியான செல்வப் பெருந்தகை, வெற்றியிலும் தோல்வியிலும் மக்கள் பக்கமே நின்றவர். உதவி கேட்டு வருபவர்களுக்கு விளம்பரமின்றி உதவும் உள்ளம் கொண்டவர். நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வப் பெருந்தகை, இரண்டாவது முறையாக பேரவைக்கு சென்றார். வென்ற உடனேயே, தொகுதிக்கு சென்று, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த , ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை , தன் சொந்த செலவில் கொரோனா தடுப்பு சேவை மையமாக மாற்றினார். மேலும் தன்னுடைய இரண்டு விலை உயர்ந்த கார்களை கொரோனா சிகிச்சை ஆம்புலன்சாக சொந்த செலவில் மாற்றினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை. அதோடு, காங்கிரஸ் கட்சிப்பணியிலும் தீவிரமாக பணியாற்றினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் கலந்து கொண்டார்.

இதே போன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து மக்கள் பிரச்னைகளை பேசுவது, ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் எழுப்பி அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது என தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

செல்வப்பெருந்தகைக்கு முன்பாக , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பட்டியலினத்திலிருந்து தியாக சீலர் கக்கன், விடுதலைப்போராட்ட வீராங்கனை மரகதம் சந்திரசேகர், அஞ்சாத ஆளுமை இளையபெருமாள் ஆகியோர் இருந்துள்ளனர்.

காங்கிரசில் வலிமையான தலைவராக இருந்த இளையபெருமாளுக்கு பிறகு பட்டியலினத்தவர் பலர், எம்எல்ஏ , எம்.பி. பதவிகளைப் பெற்றாலும் மாவட்ட அளவிலே நின்று விட்டனர். ஆனால் செல்வப்பெருந்தகையோ, அப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்காமல், குன்றிலிட்ட விளக்காக ஒளிர்ந்து வருபவர். இந்திய நாடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ,ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே சென்ற ஆண்டு தேர்வானார். பல மாநிலங்களில் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், முக்கிய பொறுப்புகளிலும் மீண்டும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags :
Advertisement