#SelfmadeLeader - கமலா ஹாரிஸை புகழ்ந்த நடிகை #MallikaSherawat
அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஒரு சுயாதீன தலைவர் என நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதேபோல குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டியில் வந்ததிலிருந்தே, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கருத்துக் கணிப்புகளும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவே வருகின்றன.
இந்நிலையில் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஜோ பைடன் ” அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுக்க அனைவரும் தயாராக வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அதிபராக அவர் இருப்பார். காரணம், இப்போதே அவர் மீது உலகத் தலைவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க, டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். அதற்கு, கமலா ஹாரிஸை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என ஜோ பைடன் பேசியது பேசு பொருளாகியது.
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் முன்னரே தனது சமூக வலைதள பக்கத்தில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகள் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் Vanity Fair எனும் இணையதளத்திற்கு பேட்டியளித்த மல்லிகா ஷெராவத் தெரிவித்ததாவது..
“ கமலா ஹாரிஸ் சுயமாக உருவான ஒரு தலைவர். இந்தியாவிலிருந்து பெண் அரசியல்வாதிகள் வருவது மிகவும் அரிதான ஒன்று. ஒருவேளை அப்படி ஒருவர் வந்திருந்தால் அவர் தனது குடும்ப பாரம்பரியம் அல்லது செல்வாக்கின் மூலமே வந்திருப்பார். ஆனால் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன், எல்லாவற்றையும் தனது சொந்த கைகளால் கட்டியமைத்தவர். அவர் தான் கமலா கமலா ஹாரிஸ். ”
இவ்வாறு மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.