சீர்காழி | கோயில் உண்டியலை உடைத்து திருட்டு - 3 பேர் கைது!
சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். அப்போது அவ்வழியாக சென்ற இரவு ரோந்து போலீசார் கோயில் கேட் திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றுள்ளார். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓடினார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இருவரும் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த கொளஞ்சி (42) அவரது சகோதரர் முத்து (35) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய 3வது நபர் சீர்காழி மற்றோர் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை மர்ம நபர் தாக்கியுள்ளார். இதில் வீட்டின் உரிமையாளர் லேசான காயம் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் அப்பகுதியில் தப்பி ஓடிய நபரை தேடினர்.
அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த இலக்கியன் (29) என்பது தெரியவந்தது. இந்த 3 பேரையும் கைது செய்த சீர்காழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த 2 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.