குடும்ப பிரச்சினையால் மனைவியை கத்தியால் குத்திய காவலாளி கைது!
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (60). இவரது கணவர் ராஜேந்திரன் (65). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன், கடந்த 3 வருடத்திற்கு முன்பு தனது மனைவி ஜெயந்தியைவிட்டு பிரிந்து சென்று அண்ணாநகரை தலைமையிடமாக கொண்ட செக்யூரிட்டி நிறுவனத்தில் சேர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், மனைவி ஜெயந்தியை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் ஜெயந்தி கணவரை வீட்டில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் (மார்ச் 28) நேற்று காலை 6 மணி அளவில் மதுபோதையில் புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள கடையில் 400 ரூபாய் கொடுத்து கத்தி வாங்கி கொண்டு மனைவி வீட்டிற்கு சென்றவர் ஜெயந்தியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ஜெயந்தியின் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ஜெயந்தியை மீட்டு அக்கம் பக்கத்தினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.