“மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை” - நீதிமன்றத்தில் #DelhiPolice!
மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
குறிப்பாக பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை மோடியின் இல்லத்தின் முன் இருந்த சாலையில் வைத்து விட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியது. போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான முறைகளை கையாண்டது. ஆனாலும் வீராங்கனைகள் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர் பதியப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை டெல்லி போலீஸ் வாபஸ் பெற்றதாக வினேஷ் போகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து வாபஸ் பெற்ற பாதுகாப்பை மீண்டும் வீராங்கனைகளுக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்படவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது;
“மல்யுத்த வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை. அவர்கள் ஹரியானாவில் இருப்பதால் ஹரியானா காவல்துறையிடம் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தோம். தகவல் தொடர்பில் தவறுகள் இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது. டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு தொடர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.