"நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்" - பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னையை அடுத்த நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. பட்ஜெட் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
அந்த உரையில், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் ரூ. 1,517 கோடி மதிப்பில் நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்புற பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.