#SchoolBooks விலையேற்றம் - தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!
அரசு பாடப்புத்தகங்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மூலப் பொருட்களில் விலை அதிகரிப்பு காரணமாகத்தான் இந்த விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்படும் இப்புத்தகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விலையேற்றத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
காகித விலை, அச்சுக்கூலி உயர்ந்தால் பாடப் புத்தகங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒரே அடியாக பாடப் புத்தகங்களின் விலையை 40 சதவீதம் உயர்த்தியுள்ளது. 1 ஆம் வகுப்பு பழைய விலை 390 ரூபாய், புதிய விலை 550 ரூபாய். 3 ஆம் வகுப்பு பழைய விலை 430 ரூபாய், புதிய விலை 620 ரூபாய். 5 ஆம் வகுப்பு பழைய விலை 510 ரூபாய், புதிய விலை 710 ரூபாய். 10 ஆம் வகுப்பு பழைய விலை 790 ரூபாய், புதிய விலை 1,130 ரூபாய்.
பாடப் புத்தகங்கள் விலை உயர்வினால், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாடப் புத்தகங்கள் விலை உயர்வு விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 10 சதவீதம் வரை மட்டுமே பாடப் புத்தகங்களின் விலைகளை உயர்த்த வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.