பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் - ரஷியா அறிவிப்பு!
ரஷியாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் தர உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1,08,595.20 ஆகும். கடந்த மார்ச் மாதம், முதன் முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது, பெண்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டது. இப்போது பள்ளி மாணவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு, ரஷ்யாவில் ஆதரவும் கிடைத்துள்ள நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு இதுபோல் ஊக்கத் தொகை வழங்கும்போது, அது நெறிமுறைகளைக் குறைக்கும் என்று கூறுகின்றனர். மேலும் கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷியா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.