பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை - இரண்டு மாணவர்கள் கைது!
நாகர்கோவிலில் பள்ளி மாணவன் ஒருவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, அவர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெற்றோர்கள் தங்கள் புகாரில், தங்கள் மகன் பாலியல் தொல்லைக்கு ஆளானதை அறிந்த பள்ளி நிர்வாகம், அவனுக்கு உரிய மனரீதியான ஆதரவை வழங்காமல், மாறாக கேலிக்குள்ளாக்கியதாகவும், அவமதித்ததாகவும் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் தங்கள் மகனுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், பள்ளிக்குச் செல்ல அவன் அஞ்சுவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்பு திரண்டிருந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் மகனுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் கல்வி அலுவலக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.