ஸ்வீடனில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் உயிரிழப்பு!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி வளாகத்தில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், ஸ்வீடனில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்வீடன் ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி நேற்று வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் பணிகளை செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளி வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் 12:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
உயிரிழந்தவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், ஆசிரியர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை ஸ்வீடன் போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்? அவரின் நோக்கம் என்பது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.