ரம்ஜானுக்கு ரெடியான பள்ளி - இந்துத்துவா அமைப்பினர் மிரட்டலால் கொண்டாட்டம் ரத்து!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முயற்சியாக பள்ளி நிர்வாகம், வருகிற மார்ச் 28ஆம் தேதி குர்தா மற்றும் தொப்பி அணியவும் பன்னீர், ரொட்டி ரோல், உலர் பழங்களை கொண்டு வர கூறி மாணவர்களிடம் கூறியுள்ளது.
இதை அறிந்த அப்பகுதியில் தேவ் பூமி சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவா அமைப்பு, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்யாவிட்டால் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகம் இஸ்லாம் மதத்தை ஊக்குவிப்பதாக அந்த அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ரம்ஜான் கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஹோலி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல, மாணவர்கள் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாராட்ட உதவும் முயற்சிதான் இந்த கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொண்டாட்டம் காலாச்சாரங்களை மாணவர்களிடம் கற்பிக்கும் நோக்கில்தான் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் எந்த மத சடங்குகள் கட்டாயம் இல்லாமல் கொண்டாடப்படவிருந்தது என்று குறிப்பிட்டதோடு, சில நபர்கள் எங்கள் பள்ளி குறித்து தவறான, வகுப்புவாத ரீதியாக எரிச்சலூட்டும் செய்திகளை சமூக ஊடக தளங்களில் பதிவிடுகின்றனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.