For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!

03:48 PM Aug 20, 2024 IST | Web Editor
உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள்    tanjore  ல் நெகிழ்ச்சி சம்பவம்
Advertisement

உடல்நல குறைவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு ஓடோடி வந்து உதவிய பள்ளிக்கால நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 - 2002ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து தங்களுக்குள் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தன்னோடு படித்து, சிறுநீரக பாதிப்பால் கொரோனாவின் இறுதி காலகட்டத்தில் இறந்து போன தனது பள்ளி நண்பர் தாமரங்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நண்பர்கள் முடிவு செய்தனர். மறைந்த கோவிந்தராஜின் மகள் ருச்சிதா தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதன்படி,  தங்களோடு பனிரெண்டாம் வகுப்பில் படித்த வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பணிபுரியும் அனைவரிடமிருந்தும் ஒரு மாத கால அவகாசத்தில் ரூபாய் 1 லட்சம் நிதி திரட்டினர். இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்த நண்பர்கள் தாங்கள் படித்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.

அங்கிருந்து தனது நண்பன் மறைந்த கோவிந்தராஜின் இல்லத்திற்குச் சென்றனர். அப்போது நண்பனின் மகள் ருச்சிதாவிற்கு புதிய ஆடைகள், இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் ருச்சிதாவிற்கு  தேவையான பள்ளி உபகரணங்கள் உள்ளிட்டவைகளை தங்களது நண்பனின் மனைவி மகேஸ்வரியிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ருச்சிதாவின் பெயரில் தாமரங்கோட்டை தபால் நிலையத்தில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூபாய் 1 லட்சம் செலுத்தி அதற்கான கணக்கு புத்தகத்தையும் தங்களது நண்பனின் மனைவி மகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து மறைந்த கோவிந்தராஜின் மனைவி மகேஸ்வரி கூறுகையில், “எனது கணவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.  அவரோடு படித்த நண்பர்கள் இன்றைய தினம் எங்களது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூபாய் 1 லட்சம் தபால் நிலையத்தில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இது குறித்து நண்பர்கள் கூறுகையில், “இதேபோல் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்கள் தங்களோடு படித்த கஷ்டப்படக்கூடிய  மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதற்காக இதை செய்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags :
Advertisement