இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்றும் அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குறைந்தபட்ச உதவித்தொகையை நிர்ணயிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு இந்த சட்டம் வலியுறுத்தியது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கறிஞர் சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கே. சந்திரசேகர், ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க சம்மதிப்பதாகவும், அதற்கான சுற்றறிக்கையை வெளியிட 2 மாதங்கள் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள்,
சென்னை, மதுரை, கோவை போன்ற பெருமாநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகையும், பிற மாவட்டங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 15,000 உதவித்தொகையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பாலின பாகுபாடு பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் சுற்றறிக்கையை வெளியிட்டு, உறுதி செய்யுமாறும் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.