"எஸ்.சி, எஸ்.டி உள் இடஒதுக்கீடு செல்லும்" - #SupremeCourt மீண்டும் உறுதி
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆக.1ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் (கிரீமிலேயர்) என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த சூழலில், எஸ்.சி, எஸ்.டி உள் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் கடந்த வாரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நிலையில் அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அப்போது உள் இட ஒதுக்கீட்டை மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பை உறுதிப்படுத்தி, மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.