சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த ஆலையில், இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்பொழுது ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டது.
இந்த தீ அருகில் இருந்த அறைகளுக்கு வேகமாக பரவியது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையின் ஆலை போர்மேன் லோகநாதனை வெம்ப கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.