நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி "தமிழ் ரத்னா" விருது வழங்கி கவுரவித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு "பாரத் ரத்னா" விருது!
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் விஞ்ஞானிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தமிழ் ரத்னா விருது வழங்கி கவுரவித்திருந்தது.
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதன்
- கும்பகோணத்தில் 1925-ல் பிறந்த இவர் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
- ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
- அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.
- ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார்.
- கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
- வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 98 ஆவது வயதில் கடந்த ஆண்டு காலமானார்.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது
வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்பிற்காக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது குடும்பத்தினரிடம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்
- பி.வி. நரசிம்ம ராவ், ஜூன் 28, 1921 அன்று ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகம். பாம்பே பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.
- வேளாண் நிபுணரும், வழக்கறிஞருமான இவர், ஆந்திராவில் 1962 முதல் 1964 வரை சட்டம் மற்றும் தகவல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல், சட்டம் மற்றும் அறக்கட்டளைகள் அமைச்சராக 1964-67 வரையும், சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சராக 1967-ம் ஆண்டு பணியாற்றினார்.
- 1971 முதல் 1973 வரை ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், 1971-73 ம் ஆண்டுகளில் அனைத்திந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலராக இருந்தார். 1957 முதல் 1977 வரை ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், 1977 முதல் 1984 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 1980 முதல் 1984 வரை வெறியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். ஜூலை 19, 1984 முதல் டிசம்பர் 31, 1984 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
- மேலும், டிசம்பர் 31, 1984 முதல் செப்டம்பர் 25, 1985 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின் செப்டம்பர் 25, 1985 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- நரசிம்ம ராவ் 1991 - 1996 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தார். நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸில் இருந்து பிரதமராக வந்தவர்களில் இவர் முதலிடத்தில் உள்ளார். இவர் பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தது.
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் வழங்கிய பங்களிப்புகள் மகத்தானவை.
- இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார்.
- இவர் வெளியுறவு, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை போன்ற முக்கிய இலாகாக்களையும் கைவசம் வைத்திருந்தார். இவர் 2004ல் மறைந்தார்.
முன்னாள் பிரதமர் சரண்சிங்
- சரண் சிங் 1902 ல் உத்தரப்பிரதேசம் மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1923-ம் ஆண்டு அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1925-ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்ற அவர் காசியபாத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1929-ம் ஆண்டு காங்கிரஸ்ஸில் இணைந்தார்.
- 1937 ல் முதன்முதலாக சாபிராளி தொகுதியிலிருந்து சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1946, 1952, 1962 மற்றும் 1967 ஆண்டுகளில் அவர் இத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1951-ம் ஆண்டு மாநில அமைச்சரவையில் நீதி மற்றும் தகவல் துறை அமைச்சரானார். 1952ல் டாக்டர் சம்பூர் ஆனந்த் அமைச்சரவையில் அவர் வருவாய் மற்றும் வேளாண்மை துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1959-ம் ஆண்டு வருவாய் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
- தொடர்ந்து, உள் துறை மற்றும் வேளாண் துறை, வனத்துறை அமைச்சராகப் பணிபுரிந்த சரண்சிங், நாட்டின் 7-வது பிரதமராக 1979-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 170 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியிலிருந்த சரண் சிங், பிறகு, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் ராஜிநாமா செய்ய நேரிட்டது. இவர் 1987-ம் ஆண்டு மறைந்தார்.