சங்கரநாராயண சுவாமி கோயில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரை
பிரம்மோற்சவ திருவிழா பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது
வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனி தனியாக அலங்கரித்து நிறுத்தப்பட்டு இருந்த திருத் தேர்களில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி பிரியாவிடை உடன் எழுந்தருளிய தேரை சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தனர்.
கோடை காலம் என்பதால் பக்தர்களின் தாகத்தை தணிக்க பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.