’11வது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்’
சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளை தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அம்மண்டலங்களின் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி தொடங்கபட்ட இந்த போராட்டம் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.
தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக பொருளாளர் திலகவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், பாடகி சின்மயி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போராட்டம் நடத்தும் பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு ஆறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதிலும் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.