முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.
இதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி திருமதி பியூலா ஜான் செல்வராஜ், சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பி.ஜெயசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.புருசோத்தமன்,
தொழிலாளர் காங்கிரஸ் டிரேட் யூனியன் நிர்வாகி ஐ.ஜெயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செங்குட்டுவன், உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ஜி.ராமு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.அன்புதாசன்,
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜி.சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.