தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை - மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பணிகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசாணைகள் 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சென்னைத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
மாநகராட்சிப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் அரசாணை 152 மற்றும் 139-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணைகள், பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன.
சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன்படி, தினச்சம்பளமாக ₹26,000 வழங்க வேண்டும். அனைத்துப் பிரிவுப் பணியாளர்களுக்கும் தீபாவளி போனஸாக ஒரு மாதச் சம்பளத்தை வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் 'ஓவர்லேண்ட்' தனியார் ஒப்பந்த நிறுவனத்தை மாநகராட்சிப் பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தப் போராட்ட அறிவிப்பால், மதுரை மாநகராட்சியின் பல பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்திலும் முன்வைக்கப்பட்டவை என்பதால், அவற்றை நிறைவேற்ற அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.