தாய்லாந்தில் அமலுக்கு வந்தது தன்பாலின திருமண சட்டம்!
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, கடந்தாண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறிய இந்த மசோதா தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
உலகளவில் எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரால் Pride Month என்று கொண்டாடப்படும் ஜூன் (2024) மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து இந்த மசோதா மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டது. இதன் மூலம் ஆசிய அளவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாகவும் தெற்காசியாவில் முதல் நாடாகவும் தாய்லாந்து திகழ்கிறது.
இந்த நிலையில் தாய்லாந்தில் இன்று (ஜன.23) தன்பாலின் திருமணச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் தாய்லாந்து தலைநகரான பாங்காங்கில் 300க்கும் மேற்பட்ட எல்ஜிபிடிக்யூ+ ஜோடிகள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.