ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தார். அதன் பின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து, இன்று சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதலமைச்சர் சம்பாய் சோரன் தாக்கல் செய்தார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணை காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல் துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் உள்ளிட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு வந்தனர்.
இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில 12-வது முதலமைச்சராக தொடர்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு பெரும்பான்மை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 சட்ட மன்ற உறுப்பினர்களும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 17 மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் சம்பாய் சோரன் அரசு 47 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஜார்க்கண்ட் மாநில 12வது முதலமைச்சராக தொடர உள்ளார் சம்பாய் சோரன். அவருக்கு எதிராக 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.