ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் தான் கைதான பின்னர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 5 மாத காவலுக்குப் பிறகு கடந்த ஜூன் 28ஆம் தேதி ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.
இதனை அடுத்து ஹேமந்த சோரன் வீட்டில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்தே சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தனது ராஜிநாமா கடிதத்தையும் அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமைக் கோரியுள்ளார் ஹேமந்த் சோரன்.