"70 பேரின் கண்காணிப்பில் #SalmanKhan" - குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சால்மான் கானை சுமார் 70 பேர் கண்காணித்து வருவதாக போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள இவரின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்தது.
நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சுகா என்பவரை நவி மும்பையில் நேற்று போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் இன்று சுகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனுடன் போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
"நடிகர் சல்மான் கானை பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்வதற்கு ரூ. 25 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளார். சல்மான் கானை கொல்வதற்காக ஏ.கே. 47, ஏ.கே. 92, எம் 16, ஜிகானா முதலான ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து வாங்குவதற் திட்டமிட்டிருந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுத வியாபாரி டோகர் என்பவரிடம், சுகா தொடர்புகொண்டு, முன்பணமாக 50 சதவிகிதத்தை செலுத்துவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர்.
பந்த்ரா வீடு, பன்வெல் பண்ணை வீடு, கூர்கான் திரைப்பட நகரில் சல்மான்கானின் நடவடிக்கைகளை 60 முதல் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சல்மான் கானை கொலை செய்வதற்கான 2023 ஆகஸ்ட் முதல் ஏப்.,2024 வரையில் அனைத்து திட்டங்களையும் தீட்டியதாக தெரிகிறது. சல்மான் கானை கொலை செய்த பிறகு அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்லவும் திட்டமிட்டனர்." இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.