சேலம் பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
சேலம் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை வாகனப் பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேரணி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைந்தது. இதையடுத்து, இன்று காலை பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து, சேலம் பொதுக்கூட்டத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டர்.