சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலில் முதலமைச்சர் - மாஸ் காட்டிய ட்ரோன் ஷோ!
சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேலம் வந்தடைந்தார். அங்கு ட்ரோன் ஷோ நடைபெற்றது.
திமுகவின் இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை (ஜன. 21) காலை தொடங்கி முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது. காலை சரியாக 9 மணிக்கு திமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாநாட்டு பந்தலை திறந்து வைக்கிறார்.
மொழிப்போர் தியாகிகளின் படங்களை அரசு கொறடா கோவி செழியன் திறந்து வைக்கிறார். இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வரவேற்பு உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஆ.ராசா, திருச்சி சிவா உள்பட பல்வேறு தலைப்புகளில் முன்னணி பேச்சாளர்கள் உரையாற்ற உள்ளனர்.
மாலையில் நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். இளைஞரணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திமுகவினர் பேருந்துகள், வேன்களில் தற்போதே சேலத்துக்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.
மாநாட்டின் இறுதிக் கட்டப் பணிகளில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேலம் வந்தடைந்தார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். கருப்பு சிவப்பு உடைய அணிந்து இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வரும் இளைஞர் அணி நிர்வாகிகளை கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார் முதலமைச்சர்.
தமிழை, தமிழ் குடியை காப்பாற்றி, நீட்டை ஒழிப்பார் என முதலமைச்சரை புகழ்ந்து பாடல்கள் ஒலிக்க இருசக்கர வாகன பேரணி தொடர்ந்து நடைபெற்றது. இருசக்கர வாகன பேரணி நிறைவடைந்ததை தொடர்ந்து ட்ரோன்கள் அணி வகுப்பு தொடங்கியது. மாநாட்டின் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் ஆர்வத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கினார்.
1500 ட்ரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ நடைபெற்றது. பின்னணி இசைக்கேற்ப பச்சை நிறம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ட்ரோன்கள் மாஸ் காட்டின. ட்ரோன்கள் பின்னணியில் திராவிட இயக்க வரலாறு மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு விளக்கப்பட்டது. திமுக கொடியை இளைஞரணி நிர்வாகி ஏந்தி செல்லும் உருவம் ட்ரோன்களில் காட்சி அமைக்கப்பட்டது.
ஒற்றை செங்கலை தூக்கி நிற்கும் உதயநிதி ஸ்டாலின் உருவம் ட்ரோன்களில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் வெல்லும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையெழுத்து மற்றும் பேனா வடிவம் ட்ரோன்கள் மூலம் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.