#Salem | தொடர்மழையால் வீண்போண பருத்தி செடிகள்.. விவசாயிகள் வேதனை!
ஆத்தூரில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் அழுகின. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளான தலைவாசல், வீரகனூர், வெள்ளையூர், நத்தக்காடு, லத்துவாடி, தம்மம்பட்டி ,கெங்கவல்லி, உள்ளிட்ட பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்த பருத்தி பயிரை ஆடிப்பட்டத்தில் நடவுசெய்து பின்னர் ஆறு மாதங்கள் பராமரிப்பிற்கு பின்பு தை மாதம் முதல் சித்திரை மாதங்களில் அறுவடை செய்வது வழக்கம்.
தற்போது பருத்தி செடிகளில் காய் பஞ்சு வெடித்து அறுவடை செய்யவுள்ள நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளையூர், வீரகனூர், நத்தக்காடு, கிழக்கு ராஜாபாளையம், லத்துவாடி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்திச் செடிகள் அழுகிப்போனது.
செடிகளில் இருந்த பூக்கள், காய்கள் உதிர்ந்து கொட்டுப்பருத்திக்கு கூட ஆகாததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர். எனவே பருத்தி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உரிய புயல் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.