“அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பூசிமொழுகும் முயற்சி!” - திருமாவளவன்!
கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, அவர்கள் விரும்பிய அளவுக்கு அவர்களை திருப்திப்படுத்தவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என பட்ஜெட் குறித்து திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து, தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும் இதுதொடர்பான பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். தமிழக எம்பிக்கள் அனைவரும் இந்த அமலியில் ஈடுபட்டனர். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது;
“பட்ஜெட் ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப் பட்டதில்லை. எல்லா மாநிலங்களுக்கும் வளர்ச்சி முக்கியமானது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை பற்றி இந்த ஆட்சியாளர்கள் பேசி இருக்கிறார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் 40 ஆயிரம் கோடிக்கு மேல் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள், பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டுவார். தமிழுக்கு அதிகமாக இணக்கமாக இருப்பவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆனால் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கசப்பை நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுத்தி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இது போன்று பல மாநிலங்கள் பாதிப்படைந்துள்ளன. தம்முடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, அவர்கள் விரும்பிய அளவுக்கு அவர்களை திருப்திப்படுத்தவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு என கூறுவது பூசிமொழுகும் முயற்சி. எதிர்ப்பை பதிவு செய்யவே நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கின்றனர். நிதி வேண்டாம் என்பதற்கு அல்ல” என தெரிவித்தார்.