சாய், கில் அதிரடி ஆட்டம்... குஜராத் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி!
அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் கே.எல்.ராகுல் சதமடித்தார்.
இதன்மூலம் குஜராத்துக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆட்டமிழக்காமல் நாங்களே போட்டியை முடித்து கொடுக்கிறோம் என்பது போல விளையாடினர்.
ஒரு பக்கம் சுப்மன் கில் 93 ரன்கள் அடிக்க, மற்றொரு பக்கம் சாய் சுதர்சன் 108 ரன்கள் விளாச குஜராத் 19 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றியை பெற்றது. இந்த வெற்றி, குஜராத்தை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியது மட்டுமல்லாமல், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது.
18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்னும் 2 போட்டிகளும் விளையாடவிருக்கிறது. அந்த போட்டிக்களிலும் வெற்றிபெற்றால் 22 புள்ளிகளை பெறலாம். அதே சமயம், இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்த நிலையில் புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி இதுவரை 13 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் இன்னும் அவர்களுக்கு 2 போட்டிகள் மீதமுள்ளது. அந்த போட்டியில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.