எழுத்தாளர் ‘தேவி பாரதி’க்கு சாகித்ய அகாடமி விருது!
‘நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் என 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய எழுத்தாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும் பட்டையமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற தேர்வாகியிருக்கிறார். டெல்லியில் மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் டிசம்பர் 30, 1957-ல் பிறந்தார். அவர் கஸ்பாபேட்டையில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்புவரை படித்துள்ளார். தேவிபாரதி பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைப்படக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி உள்ளார். குறிப்பாக தேவிபாரதியின் சிறுகதைகளில் காந்தியை பற்றிய “பிறகொரு இரவு” போன்றவை கவனிக்கப்பட்ட படைப்பாக உள்ளது.
மேலும், அரசியல் கட்டுரைகளும், நெருக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் தேவபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று தன்னறம். இந்த சிறுகதை 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெருவாரியான வரவேற்பை பெற்றது. பலி, கண் விழுத்த மறுநாள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும் போன்ற பல சிறுகதைகளை படைத்துள்ளார்.