சபரிமலை மகர விளக்கு பூஜை - பாதுகாப்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்.!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களையொட்டி, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கும்
பொருட்டும், மழை பாதிப்பு தொடர்பாகவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டு எடுத்து வருகிறது.
இந்நிலையில், தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் இருந்து மீட்புப் படைவீரர்கள் நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
சாலை மார்க்கமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பைக்கு புறப்பட்டுச்
சென்றனர். இவர்கள் பேரிடர் மீட்புக்கான அதிநவீன உபகரணங்கள், தொலைத்தொடர்பு
சாதனங்கள், முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புக்கான
உபகரணங்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஏற்கனவே 13000 கேரள போலீசார்
6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சபரிமலையில் தேசிய
பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் 4வது பட்டாலியனில் இருந்து கமாண்டர் உமா எம் ராவ் தலைமையில் 65 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளது. இதில் 45 பேர் சன்னிதானத்திலும், 20 பேர் பம்பையிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து விதமான பேரிடர்களையும் எதிர்கொள்ள இந்த குழு தயாராக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளனர். மண்டல பூஜைகள் முடியும் வரை இவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.