சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜைகள்: ரூ.357.47 கோடி வருவாய்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357.47 கோடி எனவும், இது சென்ற ஆண்டை விட அதிகம் எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆண்டுத்தோறும்
கார்த்திகை மாதம் 1ம் தேதி மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நடைதிறக்கப்பட்டது.
அன்றிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இருமுடி கட்டி
ஐய்யப்ப சாமியை தரிசித்தனா். 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்,
வழிபாடுகளுக்கு பிறகு டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய
தினம் கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை
ஐய்யப்பன் கோயில் நடை டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக
நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி மகரவிளக்கு
பூஜை நடைபெற்றது.
அன்று மாலை பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகர ஜோதியை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், இன்று இரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்களின் வருகையும், வருமானமும் அதிகரித்துள்ளது. நடப்பு 2023-24 ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357.47 கோடி (ரூ.357,47,71,909) என்று தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டை விட ரூ. 10 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு வருவாய் ரூ.347.12 கோடியாக இருந்தது (ரூ.347,12,16,884). இந்த ஆண்டு ரூ. 10.35 கோடி (ரூ. 10,35,55,025) வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.
இதில் அரவணை மூலம் ரூ. 146 கோடியே 99 லட்சம் (146,99,37,700), அப்பம் மூலம் ரூ. 17 கோடியே 64 லட்சம் (17,64,77,795) ரூபாயும், பக்தா்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக அளித்த பொருட்கள், நாணயங்களை கணக்கிடப்படவில்லை என்றும், கணக்கிட்டால் இன்னும் குறைந்தது 10 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த முறை 50 லட்சம் (50,06412) பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்த சீசனில் 44 லட்சமாக (44,16,219) இருந்தது. இந்த முறை கூடுதலாக 5 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர்என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார்.