சபரிமலை விமான நிலையம் - நிலம் கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!
சபரிமலையில் விமான நிலைய அமைப்பதற்கான நில கையகப்படுத்துதலில் ஏதேனும் ஆட்சபணை இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ளது ஐயப்பன் கோயில். பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உண்டு. பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஐயப்பன் கோயில் அருகே விமான நிலையம் அமைப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் விமான நிலையம் அமையவுள்ள எருமேலி, மணிமாலா கிராமங்களை சுற்றி 2570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை கேரள அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
கோட்டயம் மாவட்டம், தென் எருமேலி மற்றும் மணிமலை கிராமங்களில் சபரிமலை விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட இருக்கும் 2,570 ஏக்கர் பரப்பளவிலான 441 நிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து மாநில அரசு கருத்து கோரியுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டால், நாடெங்கும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருவார்கள். இதன்மூலம், அப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடைந்து, பொருளாதாரம் உயரும். மேலும், அப்பகுதி மக்களின் போக்குவரத்து இணைப்பு மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலம் கையகப்படுத்துதலில் ஏதேனும் ஆட்சபணை இருந்தால் 15 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.