For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

07:11 AM Dec 28, 2023 IST | Web Editor
சபரிமலை   பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Advertisement

சபரிமலைக்கு பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் பம்பை நதியில் நீராடிய போது நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து சபரிமலையில் குவிந்தனர். தற்போது மண்டல பூஜை நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து மகர விளக்கு பூஜைக்காக வரும் 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் கடந்த 39 நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் வரலாறு காணாத பெரும் கூட்டம் என்பதால் ஏற்பாடுகளில் கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதில் கேரளா உயர்நீதிமன்றமும் தலையிட்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மரணம் அடைந்தார்.

அதேபோல திண்டுக்கல் மாவட்ட பக்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் சபரிமலையில் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. சபரிமலையில் ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்பிய தமிழ்நாட்டு பக்தர்கள் 2 பேர் செங்கன்னூரில் பம்பை நதியில் நீராடினர்.

அப்போது பம்பை நதி வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். அவருடன் நீராடிய மற்றொரு பக்தர் வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை மீட்க முயன்றார். ஆனால் இருவருமே பம்பை நதி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பம்பை நதியில் இறங்கி தேடிய போது இருவரது சடலங்கள்தான் மீட்கப்பட்டன.

பம்பை நதியில் நீராடிய போது நீரில் மூழ்கி இறந்த 2 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சென்னையில் இருந்து 22 பேர் கொண்ட குழுவாக சபரிமலை யாத்திரை வந்தனர். சபரிமலை யாத்திரையை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பும் போது இந்த துயர சம்பவம்
நிகழ்ந்துள்ளது.

பம்பை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சந்தோஷ் (19),  அவினாஷ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் சபரிமலை ஐயப்ப பக்தர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement