படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியல் - ராஜிவ் காந்தி மருத்துவமனை முன்புள்ள பூந்தமல்லி நான்குமுனை சாலை முடங்கியது!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ராஜிவ் காந்தி மருத்துவமனை முன்புள்ள பூந்தமல்லி நான்குமுனை சாலை முற்றிலுமாக முடங்கியது.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே ஆதரவாளர்களுடன் நின்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது, ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி
மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து
செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்
சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சியில் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அரசு தலைமை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு அவரது தொண்டர்கள் ஒன்றுகூட தொடங்கினர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன்புள்ள முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நான்கு முனை சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது. காவல்துறையினர் தலையிட்டு போக்குவரத்தில் வேறு பகுதிக்கு மாற்றம் செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறியதாக கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.