140க்கு அதிகமான டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல்… பற்றி எரிந்த #Russia!
ரஷ்யா மீது உக்ரைன் திங்கட்கிழமை நள்ளிரவில் 144 ட்ரோன்களை வீசி சரமாரயாக தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷ்யா மீதான வான்வழி தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் மீது உக்ரைன் 140க்கும் அதிகமான டிரோன்களை வீசி நேற்று முன்தினம் நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இதில் 2 டிரோன்கள் மாஸ்கோவிற்கு வெளியே ராமென்ஸ்காய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 9 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். இதில் 120க்கும் அதிகமான டிரோன்களை ரஷ்ய அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர். போர் தொடங்கிய பிறகு ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய 2வது மிகப்பெரிய டிரோன் தாக்குல் இதுவாகும். கடந்த 1-ம் தேதி உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 158 டிரோன்களை ஒரே இரவில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.