உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.
பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 143 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு கீழே இருக்கும் பதுங்கு அறைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது, ரஷ்யப் படை ஏவிய 18 ஏவுகணைகள் மற்றும் 25 ட்ரோன்களை தடுத்து அழித்ததால், சிறிதளவே சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.