உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்!
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 784 நாட்களை கடந்த நிலையில், இதுவரை 50,000 -ம் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. போர் தொடங்கி இன்றுடன் 784 நாளை கடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.
ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. இந்த போரில் இதுவரை 50,000 -க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிகிவ் நகர் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் 3 ஏவுகைணைகள் தாக்கிய நிலையில், இதில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 3 குழந்தைகள் உள்பட 60 பேர் காயமடைந்ததனர். இதில் 8 அடுக்குமாடிகளை கொண்ட ஓட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததன. 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மருத்துவ மற்றும் கல்வி மையங்கள் மற்றும் குடியிருப்புகள் இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைனுக்கு போதுமான வான் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைத்திருந்தால், ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகளின் ஆதரவு போதுமானதாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.