ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வெறுப்புணர்வை பரப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைபயணம் அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை கடந்து ஒடிஸாவில் பயணித்தார். இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு சத்தீஸ்கரில் தனது நடைப்பயணத்தை நேற்று (பிப்.11) மீண்டும் தொடங்கினார். ராய்கரில் கேவ்தபாடி செளவுக் பகுதியில் கூடியிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது வெறுப்புணர்வும் வன்முறையும் பரப்பப்படுகின்றன. மொழி அடிப்படையிலும், மாநிலத்தின் அடிப்படையிலும் வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். இத்தகைய எண்ணம் நாட்டை பலவீனமாக்கும். வெவ்வேறு நம்பிக்கைகள், எண்ணங்களைக் கொண்ட மக்கள் அன்புடனும் ஒற்றுமையுடனும் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் மரபணு அன்பாக இருக்கும் நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இத்தகைய வெறுப்புணர்வை நாட்டில் பரப்பி வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரு சமூகத்தினரிடையேயான வன்முறை காரணமாக மணிப்பூர் மாலநிம் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை. வடகிழக்கு மாநிலத்தில் தொடர்ந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது.
விவசாயிகள் உயிரிழப்பையும், தொழிலாளர் பிரச்னைளையும் ஊடகங்கள் காட்ட மறுக்கின்றன. மாறாக, தொழிலதிபர்கள் அதானி, அம்பானி குழந்தைகளின் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அதன் காரணமாகத்தான், மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்தேன்” இவ்வாறு தெரிவித்தார்.