ரூ.66,690 கரண்ட் பில் - மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!
மும்பையில் வசிக்கும் ஒரு நபர் ரூ.66,690 கரண்ட் பில் வந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
மனிதர்களின் அடிப்படைத் தேவையாக மின்சாரம் உள்ளது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மின்சாரத்தின் தேவை உள்ளது. உணவு முதல் குளியல் வரை.., செல்போன் முதல் ஏசி வரை என மின்சாரம் இல்லாத ஒருநாளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதே இயலாத காரியம். பல வீடுகளில் இன்று இன்வெர்ட்டர் மிக முக்கியமான தேவையாக மாறியிருக்கிறது.
சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் ஏர் கண்டிஷனுக்கு மாறியிருக்கிறார்கள்.
என்னதான் ஏ.சி. வாங்கியிருந்தாலும் அவர்களின் கவனம் முழுக்க ஏ.சி.ரிமோட்டிலேதான் இருக்கிறது. கரண்ட் பில் அதிகமாக வந்துவிடும் எனக்கூறி ஒரு மணி நேரம் ஏசியை போட்டுவிட்டு அணைத்துவிடும் ஏராளமான நடுத்தரக் குடும்பங்களுக்கு வெயில் காலத்தில் கரண்ட் பில் தான் சமாளிக்க முடியாத சுமையாக மாத பட்ஜெட்டில் இணைந்துவிடுகிறது.
இப்படியிருக்க சமீப காலமாக மின்கட்டண பற்றிய செய்திகள் அதிர்ச்சியை தருகின்றன. மின்சாரத்தை விட மின் கட்டணங்கள்தான் அதிகளவில் பொதுமக்களுக்கு ஷாக் கொடுக்கின்றன.
இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் ஒரு நபர் தனது மின்சார கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை Reddit எனப்படும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். "கிரேசிப்ரோகாஸ்டினேட்டர்" என்ற பெயரைக் கொண்ட பயனர் தனக்கு ₹ 66,690 கரண்ட் பில் வந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த பதிவு Reddit பயனர்களிடமிருந்து விரைவாக கவனத்தைப் பெற்றது .