குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
கடந்த ஜூலை 12 ஆம் தேதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நபரை, போலிசார் தேடி வரும் நிலையில் தற்போது குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கடந்த ஜூலை 12 ஆம் தேதி நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின் அந்த சிறுமி கூச்சலிட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி, ஒரு தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஜூலை 12 ஆம் தேதி தனக்கு நடந்ததை வீட்டிற்கு சென்று தனது பாட்டியிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பின் பொன்னேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர்கள் அருகிலுள்ள ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் ஆரம்பாக்கம் காவல்துறையினர் குற்றம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் சேகரித்து, குற்றவாளியை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் அந்த நபர் ஆந்திராவிற்கு தப்பித்து சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.