ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பேசினார். அப்போது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) தொடர்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 91 லட்சம் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளில் பங்கேற்கின்றனர். இதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், 29 சதவீத தொழிலாளர்கள் எஸ்சி/எஸ்டி குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு நிதியை வழங்காததால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ. 2ஆயிரத்து 985 கோடி சம்பளத்தொகை கடந்த 4.5 மாதங்களாக நிலுவையாக உள்ளது. மேலும் ரூ.1,048 கோடி மதிப்புள்ள பொருள் செலவினப் தொகையை சேர்த்தால் மொத்த நிதி ரூ.4 ஆயிரத்து 34 கோடி ஆகும்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள ஊதியத் தொகைகளை உடனடியாக வழங்குமாறு ஏற்கனவே கடந்த 13.01.2025 அன்று பிரதர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதுவரை அந்த தொகை விடுவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.