மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு.... அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!
மும்பையை சேர்ந்த எம்எல்எம் மோசடி முதலீட்டாளருக்கு எதிரான வழக்கில் ரூ.37 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பொன்ஸி எனப்படும் எம்எல்எம் திட்டங்கள், நாட்டில் பலவகையாக நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், மோசடிகள் தொடரவே செய்கின்றன. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது.
அந்த வகையில் ரூ. 600 கோடிக்கு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக மும்பையை சேர்ந்த நிதி ஆலோசகருக்கும், அவரது நிறுவனத்திற்கும் எதிராக புகார் எழுந்துள்ளது. இந்த பணமோசடிக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் ரூ.37 கோடி மதிப்பிலான ரொக்கம், வங்கி மற்றும் டிமேட் கணக்கு வைப்புகளை அமலாக்கத்துறை தற்போது கைப்பற்றி உள்ளது.
அம்பர் தலால் மற்றும் அவரது நிறுவனமான ரிட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றுக்கு எதிராக ஜூன் 21 அன்று மும்பை பெருநகரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் பொன்ஸி திட்டத்துக்காக 1300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.600 கோடி பணம் திரட்டப்பட்டதாகவும், பின்னர் அவற்றிலிருந்து தனிப்பட்ட வகையில் கையாடல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, துத்தநாகம், ஈயம், நிக்கல், தாமிரம், அலுமினியம் ஆகியவற்றின் மீதான சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் முதலீடுகள் திரட்டப்பட்டன. மூலதனம் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், அதிலிருந்து ஆண்டு வருமானம் தரப்படும் எனவும் முதலீட்டாளர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது. இந்த வகையில் புதிதாக சேரும் முதலீட்டாளர்களின் முதலீடு, பழைய முதலீட்டாளர்களுக்கு பிரித்து தரப்பட்டது.
இந்தியாவில் மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்தும் அவர் பணம் திரட்டியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தின் கணக்கிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களின் கணக்கிற்கு பணத்தினை அனுப்பியுள்ளார். இதன்மூலம் சுமார் ரூ.51 கோடி மதிப்பீட்டில் வெளிநாட்டிலும், இந்தியாவிலும் சொத்துகளை வாங்கியுள்ளார். இதில் இந்தியாவில் 8 மற்றும் வெளிநாட்டில் 2 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது.