Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

12:32 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த
நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்
துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு,  எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது பருப்பு,  எண்ணெய் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த முறைகேடு குறித்து 2018-ம் ஆண்டு புகார் அளித்ததாகவும், இதற்கு 2022-ம் ஆண்டு விரிவான விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்ததாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால்,  இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்,  மனுதாரருடன் சேர்த்து 3 பேர் இதே புகாரை தெரிவித்துள்ளதாகவும் அந்த புகார்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தற்போது விரிவான விசாரணை துவங்கி உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும்,  31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டியுள்ளது என்றும் விசாரணை முடியும் முன்பு மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,  மனு மீதான விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags :
ADMKallegationsChennai highcourtformer MinisterIrregularitieskamarajNews7Tamilnews7TamilUpdatesOPS
Advertisement
Next Article