வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! - புனேவில் அதிர்ச்சி சம்பவம்!
புனேவைச் சேர்ந்த இருவர் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வணிகம் என ரூ.2.45 கோடியை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில்நுட்பங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக எந்த தொழில்நுட்பங்களை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அதில் தான் அதிக மோசடியும் நடைபெறுகிறது. அந்த வகையில், வாட்ஸ்ப் ஆப் குழு மூலம், ரூ.2 கோடி வரை மோசடி நடந்துள்ளது.
புனேவை சேர்ந்த 53 வயதான நபர் ஒருவரும், அவரின் சகோதரரும் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்ந்துள்ளனர். அந்த வாட்ஸ்ஆப் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மோசடியாளர்கள் வாட்ஸ்ஆபில் வழிகாட்டியதன் மூலம், சகோதரர்கள் இருவரும் பங்கு வர்த்தகக் கணக்கு தொடங்கி உள்ளனர். வாட்ஸ்ஆப் குழுவில் வரும் ஆலோசனைகளின் பேரில் பங்குகளை வாங்கியுள்ளனர்.
அப்போது மோசடியாளர்கள், பங்குகளை வாங்க ஒரு லிங்க் அனுப்பி உள்ளனர். அதில் மூத்த சகோதரர் ரூ.1,67,80,000 செலுத்தியுள்ளார். இளைய சகோதரர் ரூ.77,50,000 செலுத்தியுள்ளார். இருவரும் தங்களது பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். பின்னர், அவர்களுக்கு ரூ.8 கோடி லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. அ ந்தப் பணத்தை எடுக்க சகோதரர்கள் முயற்சித்த போது, மோசடியாளர்கள், உங்களது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!
இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட இருவரும், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வாட்ஸ்ஆப் குழுக்களில் சேரும் போதும் பிறர் நம்மை சேர்க்கும்போதும் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.