பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் உயிரிழப்பு!
பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு 60 பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.