கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்!
சுற்றுலா தலமான கோவாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தந்து அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம். இதனிடையே, கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி படகுகளை இயக்குதல், சுற்றுலா பொருட்களை வாங்கக்கோரி வியாபாரிகள் கட்டாயப்படுத்துதல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் மது அருந்துதல், டிக்கெட் விற்பனை, பிச்சை எடுத்தல், கடற்கரைகளில் வாகனங்களை இயக்குதல் போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்குப்பின் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். கோவாவின் சுற்றுலா தலங்களின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல், பொறுப்பான சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று கூறப்படுகிறது.