#RRvGT | அதிரடி திருப்பங்கள்... கடைசி பந்தில் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 10) சவாய் மான்சிங் மைதானத்தில் 24 வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 4.2 ஓவரில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஷ்வால் அவுட்டானார். அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதனையடுத்து பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இந்த இணை 16. 5 ஓவரில் 150 ரன்களை தொட்டது.
78 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்தமையர் முதல் பந்திலே பவுண்டரி அடித்தார். பவுண்டரிகளை விளாசிய சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஓபனிங் ஆடினர். ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர் என 46 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்து அதிரடி காட்டினார் ஷுப்மன் கில். 15வது ஓவர் வரை தாக்குப் பிடித்த கில் சாஹல் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து இறங்கிய மேத்யூ வேட் மற்றும் அபினவ் மனோகர் இருவரும் தலா நான்கு மற்றும் ஒரு ரன்களுடன் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ராகுல் டேவாட்டியா மற்றும் ஷாருக் கான் இணை விளையாடினர். 18 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே அடித்திருந்த குஜராத் அணியை கடைசி 2 ஓவர்களில் காப்பாற்றினார் ரஷீத் கான். பரபரப்பான கடைசி தருணத்தில் நான்கு பவுண்டரிகளை அடித்து குஜராத் அணி ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தார்.
கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டேவாட்டியா ரன் அவுட் ஆகவும், தோல்வி உறுதி என்ற நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்ட நேரத்தில், கடைசி பந்தில் ஒரு ஃபோர் தூக்கி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் ரஷீத் கான். பரபரப்பான இறுதி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.