டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி
குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழி நடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்திய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது இந்திய அணி. தோல்வியடைந்தபோதிலும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தங்களது அபார திறனை வெளிப்படுத்தியதாக பலரும் பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு இந்த ஓய்வு என்பது மிகவும் அவசியமானது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க அவர்களுக்கு இந்த ஓய்வு உதவியாக இருக்கும். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா தயாரான பிறகு, அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும். ஏனெனில், அவர் உலகக் கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரோஹித் மற்றும் விராட் இருவரும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள். குறைந்தது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரையிலாவது ரோஹித் சர்மா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார். ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.