தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா!
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று (மார்ச்.09) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை அடித்தது.
தொடர்ந்து 252 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இத்தொடருக்கிடையே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது, அதற்கு காரணம் கடந்த டி20 உலக கோப்பையை இந்தியா அணி வென்ற பெற்ற பிறகு ரோஹித் சர்மா அந்த தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்றைய வெற்றிக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். வதந்திகளை பரப்ப வேண்டாம்”
இவ்வாறு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.